Thursday, November 12, 2009

வன்மக் காதல்!

கனவு கண்டு நீள்கிறது
காதலின் புணர் இரவு.
நிசப்தத்தின் பேரொலியில்
வானமது செவிடாய் போக,
இத்துயர் கண்டு கண்பொத்து
விண்மீன்கள் குருடாய் போக,
பிறையாம்பல் குளமொன்று
மாரடித்து ஓய்ந்திருந்தது!

மழை தந்த தாபம்!

உனது பிரிவின் உக்கிரத்தை என்மேல்
உமிழ்ந்து சென்றன எச்சநினைவுகள்.
என் கருவிழி காணும் அடர் இருட்டு,
உரக்கச் சொல்லும் தனிமையின் சோகத்தை.
நனைந்த பஞ்சென எண்ணங்கள் யாவும்
கனக்கிறது இன்று நெஞ்சத்தினுள்ளே!

என் கரம் பற்றி, உயிர் தீண்டும் குளிர்ப்பனிக்காற்று,
உன் முத்தத்தின் ஈரத்தை உணர்த்திச் செல்ல,
நினைவோடும் 'நாம்' இறந்த காலமென்
குறுநகையை வேரறுத்துச் சற்றே மீள,
எந்தைய நேற்றுகள் இறந்ததாய்,
இன்றைய பிறப்புகள் பறையடித்துக் கதற,
உன் பிரிவு தரும் தீரா தாபத்தினை
விடியல்கள் மெல்ல அழித்தபோதும்,
உனக்கான என் காதலைத் தணிக்க,
இவ்வொரு பேய்மழையும் போதாது!